1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன். பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய பி.டி.செல்வகுமார்.



குமரி மாவட்டம் தெற்குசூரங்குடி வைகுண்டர் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் பிரபல சினிமா இயக்குனருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அந்த மேடையில் பழவிளை கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ராமபிரதாப் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் ஒப்பித்தார்.

அந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு அந்த மேடையிலேயே பி.டி. செல்வகுமார் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.

மேடையில் பரிசு வழங்கி பி.டி. செல்வக்குமார் பேசியதாவது:- ஏழை மாணவர்களுக்கு கல்வி ஒரு தடையாக இருக்கக் கூடாது, இந்த சிறுவயது மாணவனுடைய திறமையை உலகறிய செய்ய வேண்டும். அவனுடைய திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக இந்த பரிசு தொகையை வழங்கினேன்.

அதேபோல இங்கு ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு பொதுநலத்தோடு இப்படி ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து பரிசுகள் வழங்கி திறமையாளர்களை அங்கீகாரம் செய்கிறார்கள். நிச்சயமாக இதை பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

மாணவ சமுதாயத்திற்கு ஒரே ஒரு வேண்டுகோள் அதாவது இரவு 7:00 மணிக்கு மேல் நீங்கள் யாரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதீர்கள். குறிப்பாக பெண்கள் பல்வேறு ஆபத்துகளும், திருமணத்திற்கு பிறகு பல சிக்கல்களும் இதனால் ஏற்படுகிறது. எனவே செல்போன் என்ற எமனை நீங்களே கையில் வைத்துக் கொண்டு அழிவை தேடி கொள்ளாதீர்கள்.
அதேபோல மாணவ செல்வங்களே நடிகர்கள் பின்னால் சென்று உங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது. உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதிகாலை எழுந்து உடற்பயிற்சியும் நடை பயணமும் செய்தால் மனநலமும் உடல் நலமும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலப்பை மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் லிங்கேசன், நற்பணி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், விழா தலைவரும் மன்ற அமைப்பாளருமான செல்ல கண்ணன், துணை அமைப்பாளர் கண்ணன், வக்கீல் சரவணன், முன்னாள் ஊராட்சிதலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










Post a Comment

Previous Post Next Post